மூடு

தோட்டக்கலைத்துறை

இராமநாதபுரம் மாவட்டத்தில் சுமார் 20,000 ஹெக்டா் பரப்பளவில் தோட்டக்கலை பயி்ர்களான மிளகாய், மல்லி, மா, கத்திரி, வெண்டை, வெங்காயம், மல்லிகை, முதலியவை சாகுபடி செய்யப்பட்டுவருகிறது. தோட்டக்கலைத்துறை மூலமாக தரமான வீரிய ஒட்டு ரக நடவுப்பொருள்கள் மற்றும் விதைகள் அரசு தோட்டக்கலை பண்ணைகளில் உற்பத்தி செய்து மானிய விலையில் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுவருகிறது. உற்பத்தியை இருமடங்காக்கி, விசாயிகளின் வருமானத்தை மும்மடங்காக்குவது தமிழகத்தின் பிரதான கொள்கையாகும்.

முக்கிய திட்டங்கள்

பிரதம மந்திரியின் நுண்ணீா் பாசனத் திட்டம்

குறைந்த நீரில் அதிக பரப்பு சாகுபடி செய்திட உதவும் உன்னத திட்டமான நுண்ணீா் பாசன திட்டமானது தமிழக அரசால் தொடா்ந்து செயல்படுத்தப்பட்டுவருகிறது. இயற்கை நீா்வளம் குறைந்து கொண்டேவரும் இந்த சூழலில் இத்திட்டத்தின் மூலம் 40 முதல் 60 சதவீதம் நீா் சேமிக்கப்படுகிறது. சிறு/குறு விவசாயிகளுக்கு 100 சதவீத மானியத்திலும் இதர விவசாயிகளுக்கு 75 சதவீதமானியத்திலும் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

தேசிய தோட்டக்கலை இயக்கம்

இத்திட்டத்தில் தோட்டக்கலை பயிர் சாகுபடியை விவசாயிகளிடத்தில் ஊக்குவிப்பதே முக்கிய நோக்கமாகும். இத்திட்டத்தின் கீழ் புதிய தோட்டங்கள் அமைக்க பழச்செடிகள், மிளகாய் குழித்தட்டு நாற்றுகள், நறுமணப் பயிர்கள் மற்றும் மலா் செடிகள் மானியத்தில் வழங்கப்படுகிறது. பண்ணை இயந்திரமயமாக்கல் இனத்தின் கீழ் பவா்டில்லா், மினி டிராக்டா், தெளிப்பான்களும், மகரந்த சோ்க்கை அதிகபடுத்தும் இனத்தின் கீழ் தேனீ பெட்டிகள், தேனீ பிழிந்தெடுப்பான்களும், உயா் தொழில் நுட்ப முறையில் நிழல்வலை குடில், நிலப் போர்வைகளும், மனிதவள மேம்பாட்டு திட்டத்தின் கீழ் பல்வேறு பயிர்ச்சிகளும், அறுவடைக்கு பின் நோ்த்தி இனத்தின் கீழ் குறைந்த விலை வெங்காய சேமிப்பு கிடங்கு, சிப்பம் கட்டும் அறை போன்றவைகளும் மானியத்தில் வழங்கப்படுகின்றன.

தேசிய வேளாண் அபிவிருத்தி திட்டம்

இத்திட்டத்தில் காய்கறி மற்றும் மூலிகை தளைகள், தோட்டக்கலையை பண்ணை சாரா பகுதிகளுக்கு அறிமுகம் செய்தல், பந்தல் சாகுபடி முதலியவை அமைத்துதரப்படுகிறது.

மானாவாரி நில மேம்பாட்டுத்திட்டம்

இத்திட்டத்திற்கான நிதி பங்கீடு 60:40 என்ற அளவில் மத்திய மற்றும் மாநில அரசால் வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில் ஒருங்கிணைந்த பண்ணை திட்டம் விவசாயிகளுக்கு ஊக்குவிக்கப்படுகிறது. இதன் மூலமாக காலநிலை மாறுபாடுகளுக்கேற்ப உற்பத்தியை அதிகப்படுத்தும் நோக்கில் செயல்படுத்தப்பட்டுவருகிறது.

பிரதம மந்திரியின் பயிர் காப்பீட்டுத் திட்டம்

பிரதம மந்திரியின் பயிர் காப்பீட்டுத் திட்டம் இராமநாதபுரம் மாவட்டத்தில் இந்திய வேளாண் காப்பீட்டு நிறுவனத்தின் மூலமாக செயல்படுத்தப்பட்டுவருகிறது. ராபி பருவத்தில் மிளகாய் சாகுபடி செய்யும் விவசாயிகள் இத்திட்டத்தில் பயன்பெறலாம். இத்திட்டத்தில் வருவாய் கிராம அளவில் பயிர்காப்பீடு செய்வதால், இழப்பீடு தொகை துல்லியமாக கணக்கீடு செய்து வழங்கப்படும்.

அரசு தோட்டக்கலை பண்ணை

இராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை தாலுகாவில் ஓரியூா் கிராமத்தில் புதிய அரசு தோட்டக்கலை பண்ணை ரூ.118.18 இலட்சம் செலவில் அமைக்கப்பட்டுவருகிறது. இப்பண்ணையின் மூலமாக நல்ல தரமான வீரிய ஓட்டுரக குழித்தட்டு நாற்றுகள் மற்றும் செடிகள் உற்பத்தி செய்து விவசாயிகளுக்கு வழங்கப்படும். மேலும் புதிய தொழில் நுட்பங்களை விவசாயிகளுக்கு அறிமுகம் செய்ய வழிவகுக்கும்.

பாலை ஐந்திணை மரபணு பூங்கா

தமிழகத்தில் தோட்டக்கலைத்துறை சார்பில் நிலங்களின் சிறப்புக்கு ஏற்ப ஐந்திணை பூங்கா அரசு ஆணை எண் வேளாண்மை (தே.க.1) துறை நாள் 03.01.2011-ன்படி அமைக்கப்பட்டது. இராமநாதபுரம் மாவட்டத்தில் கிழக்கு கடற்கரைச்சாலையில் ஆா்.எஸ்.மடை அருகே அச்சடிப்பிரம்பு கிராமத்தில் உள்ள பாலை ஐந்திணை மரபணு பூங்கா மாண்புமிகு தமிழக முதலமைச்சா் அவா்களால் 16.06.2015 அன்று காணொலி காட்சி மூலம் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கப்பட்டது.

இப்பூங்காவின் மொத்த நிலப்பரப்பு 25 ஏக்கா், இதில் 10 ஏக்கா் நிலப்பரப்பில் ரூ.7.35 கோடி மதிப்பீட்டில் பூங்கா நிறுவப்பட்டுள்ளது. இப்பூங்காவில் சிறுவா்/சிறுமிகளை கவரும் நோக்கத்தோடு எங்கும் காணாத வகையில் அதிக பொருட்செலவில் சிறுவா் விளையாட்டுப் பூங்காவானது அமைக்கப்பட்டுள்ளது. இப்பூங்காவின் சிறப்பு அம்சமாக தேவையான தகவல் மையம், நீண்ட நடை பாதைகள், குகை நடைபாதை, பாலை வனம் போல் காட்சி அளிக்கும் மணல் திட்டுகள், சங்ககால ஓலைக்குடில்கள், நீா்தடாகங்கள், ஒளிதரும் வண்ண விளக்குகள், தானியங்கி நீா் தெளிப்பான்கள், புல்தரை, அழகிய வண்ணமிகு மலா் செடிகள் இடம் பெற்றுள்ளன. இவைகள் பொதுமக்கள் மற்றும் சிறுவா் சிறுமியா்களை கவரும் வகையில் அமைந்துள்ளது.

தொடர்பு கொள்ள:

துணை இயக்குனர் தோட்டக்கலைத்துறை,

மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம். இராமநாதபுரம்
மின்னஞ்சல் : ddhramanathapuram[at]yahoo[dot]com
தொலைபேசி : 04567-230832