மூடு

காணத்தக்க இடங்கள்

இராமநாடு அல்லது முகவை என்றழைக்கப்படுகின்ற இராமநாதபுரம் தமிழ்நாட்டின் பழமையான பகுதிகளில் ஒன்றாகும்.இராமநாதபுரம் மாவட்டத்தில் சில முக்கிய சுற்றுலாத் தளங்கள் உள்ளன. அவையாவன:
இராமேஸ்வரம் இராமநாத சுவாமி திருக்கோவில், அக்னி தீர்த்தம், பாம்பன் பாலம், தனுஸ்கோடி,
முனைவர் ஆ. ப. ஜெ. அப்துல் கலாம் மணி மண்டபம், தேவிப்பட்டினம் (நவபாஷாணம்), திருப்புல்லாணி, திருஉத்திரகோசமங்கை மற்றும் ஏர்வாடி தர்கா.

இராமேஸ்வரம் சுற்றுலா இணையதளம்

இராமநாத சுவாமி திருக்கோவில்

இராமநாதசுவாமி கோவில் ஒவ்வொரு சுற்றுலாப்பிரியரின் விருப்பமாகும். இக் கோவில் அற்புதமான அமைப்பு, நீண்ட தாழ்வாரங்கள், கலையுணர்வுடன் செதுக்கப்பட்ட தூண்கள் மற்றும் உயர்ந்த 38 மீட்டர் கோபுரம் கொண்டது.

இக்கோவிலின் கட்டிடப்பணி 12 ஆம் நூற்றாண்டில் சேதுபதி மறவரால் தொடங்கப்பட்டு பிரசித்தி பெற்ற மூன்றாவது பிரகாரமானது அவரது வாரிசுகளால் முடிக்கப்பட்டது. ஆசியாவின் மிக நீளமான பிரகாரமும், உலகின் மூன்றாவது பெரியதுமான இது, கிழக்கில் இருந்து மேற்காக 197 மீட்டரும் மற்றும் வடக்கு தெற்காக 133 மீட்டரும் கொண்டது. கி.பி.1897-ம் ஆண்டு சுவாமி விவேகானந்தர் இக்கோவிலில் வழிபாடு செய்தார். இந்தியாவிலுள்ள 12 ஜோதி லிங்க வழிபாட்டுத் தலங்களுள் முக்கியமானதாகும். இங்கு சிவபெருமான் ஜோதிலிங்க வடிவில் வழிபடப்படுகிறார்.

இராமபிரான் ஒரு குறிப்பிட்ட மங்களகரமான நேரத்திற்குள் சிவ வழிபாடு செய்ய ஒரு லிங்கத்தைக் கொண்டு வருமாறு அனுமனை அனுப்பினார். ஆனால் அனுமன் வர நேரமானதால் சீதை ஒரு லிங்கத்தை உருவாக்கி இராமபிரான் வழிபட ஏற்பாடு செய்தார். இந்த லிங்கம் தான் இராமநாத சுவாமி என்று கோவிலில் வழிபாடு செய்யக்கூடிய முக்கிய தெய்வம் ஆகும். அனுமனை சமாதானம் செய்ய அவர் கொண்டு வந்த லிங்கமும் சற்று வட திசையில் அமைக்கப்பட்டது. மேலும், அனுமனின் கொண்டு வந்த லிங்கத்திற்கே முதலில் பூசை செய்ய வேண்டும் என்று ஆணையிட்டார்.

இராமநாதசுவாமி கோவில்

இராமநாதசுவாமி கோவில்


அக்னி தீர்த்தம்

கோவில் கோபுரத்திற்கு முன்னால் சுமார் 100 மீ. தொலைவில் உள்ள அமைதியான ஆழமற்ற கடல் பகுதியான அக்னி தீர்த்தம் மிகப்புனிதமாகக்கருதப்படுகிறது. இந்தபுனித நீராடுதல் பாவங்களை நீக்கும் என பக்தர்கள் கருதுகின்றனர். மற்ற முக்கிய தீர்த்தங்களாகப்பக்தர்களால் கருதப்படுபவை கோவிலுக்குள்ளும் கோவிலைச்சுற்றியும் அமைந்துள்ளன.


பாம்பன் பாலம்

மன்னார் வளைகுடா மீது கட்டப்பட்ட இந்தியாவில் மிகப் பெரிய பாலமான 2.2 கி.மீ.நீளமுள்ள அன்னை இந்திரா பாலம் ராமேஸ்வரம் தீவை முக்கிய பெருநிலப்- பகுதியுடன் இணைக்கிறது. இது பாம்பன் பாலம் என்றும் அழைக்கப்படுகிறது. இதைப்போலவே இந்தியாவில் அமைந்துள்ள மிக நீளமான 2.3 கி.மீ கடல் தொடருந்து பாலமும் அதன் வித்தியாசமான கப்பல் செல்ல திறந்து மூடும் அமைப்பிற்காக புகழ் பெற்றது.

பாம்பன் கத்திரி பாலம்

பாம்பன் பாலம்


தனுஸ்கோடி

இராமேஸ்வரம் தீவின் தென்கோடி முனையானது தனுஷ்கோடி என அழைக்கப்படுகிறது. இது 1964-ம் ஆண்டு ஏற்பட்ட புயலினால் கோதண்டராமசுவாமி கோவில் தவிர முற்றிலும் அழிவிற்குள்ளாக்கப்ப்பட்டுள்ளது. இக்கோவில் இராமேஸ்வரத்திலிருந்து 18 கி.மீ தொலைவில் உள்ளது. சாலை வழியாக இக்கோவிலை அடையலாம். இராவணனின் சகோதரனான விபீஷணன் இங்கு இராமபிரானிடம் சரணடைந்ததாக நம்பப்படுகிறது.


முனைவர் ஆ. ப. ஜெ. அப்துல் கலாம் மணி மண்டபம்

ஆவுல் பக்கிர் ஜைனுலாபுதீன் அப்துல் கலாம் அல்லது முனைவர் ஏபிஜே அப்துல் கலாம் என்று எல்லோராலும் அறியப்பட்ட இந்தியத்திருநாட்டின் 11 வது குடியரசுத்தலைவராக விளங்கிய இவர் இராமேஸ்வரத்தில் பிறந்து வளர்ந்தார். பின்னாளில், விஞ்ஞானியான இவர் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்திலும் (DRDO) இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்திலும், (ISRO) விண்வெளி பொறியாளராக பணியாற்றினார். ஷில்லாங்கில் ஜூலை மாதம் 27ஆம் திகதி ஏற்பட்ட அன்னாரது திடீர் மறைவுக்குப்பிறகு 2015 ஜூலை மாதம் 30ஆம் திகதி பேய்க்கரும்பில் நல்லடக்கம் மேற்கொள்ளப்பட்டது. அந்த இடத்தில், அன்னாரது நினைவாக ஒரு மணி மண்டபம் அமைக்கப்பட்டுள்ளது . மணி மண்டபத்தின் உள்ளே அரிய புகைப்படங்கள், ஓவியங்கள் மற்றும சில ஏவுகணைகளின் மாதிரிகள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.

முனைவர் ஆ. ப. ஜெ. அப்துல் கலாம் மணி மண்டபம்

முனைவர் ஆ. ப. ஜெ. அப்துல் கலாம் மணி மண்டபம்


தேவிப்பட்டினம் (நவபாஷாணம்)

கடற்கரை கிராமமான இது நவபாஷாணம் எனவும் அழைக்கப்படுகிறது. இராமபிரான் நவக்கிரகங்களை இங்கு வழிபாடு செய்ததாக நம்பப்படுகிறது. மகிஷாசுரனை வதம் செய்த தேவிக்கு ஒரு கோவிலும் அருகில் உள்ளது. இந்துக்கள் முன்னோர்களுக்கான சடங்குகளை இங்கு செய்கிறார்கள்.

தேவிப்பட்டினம் (நவபாஷாணம்)

தேவிப்பட்டினம் (நவபாஷாணம்)


திருப்புல்லாணி

தர்பசயனம் என அழைக்கப்படுகிற இங்கு விஷ்ணுவின் கோவிலான ஆதி ஜெகந்நாதப் பெருமாள் கோவில் உள்ளது. இராமநாதபுரத்திலிருந்து 10.2 கி.மீ தொலைவில் உள்ளது. இராமபிரான், இலங்கைக்கு செல்ல உதவிட வேண்டி சமுத்திர இராஜனை வணங்கி தர்ப்பை புல்லின் மீதமர்ந்து தவம் செய்ததனால் இவ்வூர் தர்ப்பசயனம் என்று சமஸ்கிருதத்தில் அழைக்கப்படுகிறது.


திரு உத்திரகோசமங்கை கோவில் தீர்த்தம்

திரு உத்திரகோசமங்கை

திருஉத்திரகோசமங்கை

இராமநாதபுரத்திலிருந்து சுமார் 18 கி.மீ தொலைவில் உள்ள உத்திரகோசமங்கையில் மிகப்பழமையான சிவன் கோவில் உள்ளது. இங்குள்ள மரகதத்தாலான நடராஜர் சிலை உள்ளது. இங்கு ஆண்டிற்கு ஒரு முறை நடைபெறும் ஆருத்ரா தரிசன திருவிழாவில் பக்தர்கள் கூட்டம் அலை மோதுகிறது.


ஏர்வாடி

சுமார் 800 ஆண்டுகளுக்கு முன்பு சவூதி அரேபியாவிலிருந்து கண்ணனூர் வழியாக இந்தியா வந்த சுல்தான் இப்ராகிம் சையது அவுலியாவின் கல்லறை இங்கு உள்ளது. இலங்கை, சிங்கப்பூர் மற்றும் மலேசிய நாடுகளிலிருந்து பக்தர்கள் வருகை தருகின்றனர்.

ஏர்வாடி தர்ஹா

ஏர்வாடி தர்ஹா