மூடு

வரலாறு

இராமநாதபுரம் மாவட்டம் கி.பி.1063 ம் ஆண்டில் இராஜேந்திர சோழனால் கைப்பற்றப்பட்டு சோழர்களின் கீழ் இருந்தது. பின்னர், 15 ஆம் நூற்றாண்டில் தற்போதைய இராமநாதபுரம் மாவட்டமானது பாண்டிய நாட்டின் ஒரு பகுதியாக இருந்தது. கி.பி 1520 ல் விஜயநகரத்தை ஆண்ட நாயக்கர்கள் பாண்டியர்களிடமிருந்து கைப்பற்றி இரண்டு நூற்றாண்டுகள் ஆண்டனர். 17 ஆம் நூற்றாண்டில் பாண்டிய அரசின் கீழ் மறவ மற்றும் சேதுபதிகளால் இப்பகுதி ஆளப்பட்டது. 18-ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில், ஆட்சியைப்பிடிப்பதில் ஏற்பட்ட குடும்பப்பூசல்களால் இப்பகுதி இராமநாதபுரம் மற்றும் சிவகங்கை என இரண்டு பகுதிகளாகப்பிரிக்கப்பட்டது. தஞ்சாவூர் அரசரின் உதவியோடு கி.பி 1730 ஆம் ஆண்டு பாளையக்காரர் ஒருவர் சேதுபதியிடமிருந்து சிவகங்கையைக்கைப்பற்றி அரசனானார். அப்போது இப்பகுதியை கட்டுப்பாடில் வைத்திருந்த நாயக்கர்களின் பலவீனத்தை அறிந்த பாளையக்காரர்களான சிவகங்கை அரசர் மற்றும் இராமநாதபுரம் சேதுபதி ஆகியோர் தாங்கள் ஆட்சி செய்த பகுதியை நாயக்கர்களிடமிருந்து விடுதலை பெற்றதாக அறிவித்தார்கள். கி.பி. 1730-ல் கர்நாடகத்தைச்சேர்ந்த சந்த் சாஹிப் இராமநாதபுரத்தைக்கைப்பற்றினார். கி.பி. 1741-ல், மராட்டியர்களாலும் பின்னர் கி.பி. 1744-ல் ஹைதராபாத் நிசாம் வசமும் வந்தது. கி.பி. 1752-ம் ஆண்டில் நவாபின் ஆட்சியை விரும்பாத தலைவர்கள்நாயக்க வம்சத்தின் கடைசி வாரிசை பாண்டிய மண்டலத்தின் அரசராக அறிவித்தார்கள். இராமநாதபுரம் கர்நாடக அரசின் கீழ் இருந்தத நேரத்தில், கர்நாடக அரசிற்கு, சந்த் சாஹிப் மற்றும் முகம்மது அலி ஆகியோர் எதிரிகளாக இருந்தனர். ஆங்கிலேயர்கள் சந்த் சாஹிபையும், பிரஞ்சுக்காரர்கள் முகம்மது அலியையும் ஆதரித்தனர். இதனால் தொடர் குழப்பங்கள் நிகழ்ந்தன.

1795-ம் ஆண்டு ஆங்கிலேயர்கள் முத்துராமலிங்க சேதுபதியிடமிருந்து இராமநாதபுரத்தைப் பறித்துக்கொண்டனர். 1801-ம் ஆண்டு மங்களேஸ்வரி நாச்சியார் சிவகங்கை ஜமீன்தாராக நியமிக்கப்பட்டார். இவரின் மறைவிற்குப்பிறகு மருது சகோதரர்கள் கிழக்கிந்திய கம்பெனிக்கு கப்பம் கட்டி சிவகங்கையைக் கைபபற்றினர். 1803-ம் ஆண்டு மருது சகோதரர்கள் பாஞ்சாலங்- குறிச்சியை ஆண்ட கட்டபொம்மனோடு சேர்ந்து ஆங்கிலேயரை எதிர்த்தனர். அதனால், கர்னல் ஆக்னு மருது சகோதரர்களைத்தூக்கிலிட்டார். பின், கௌரி வல்லப பெரிய உடைய தேவரை சிவகங்கை ஜமீன்தாராக நியமித்தார். திப்பு சுல்தானுக்குப்பிறகு நவாப்பை சிறையிலடைத்த ஆங்கில அரசு ஆட்சியைக் கைப்பற்றி ஜமீன்தார் முறையை ஒழித்தது. ஆங்கிலேய மாவட்ட ஆட்சியர் நிர்வாகம் செய்ய நியமிக்கப்பட்டார்.