கூட்டுறவு உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு
கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளர், சென்னை அவர்களின் கட்டுப்பாட்டின் கீழ் கூட்டுறவுச் சங்கங்களின் இணைப்பதிவாளர் அலுவலகம் இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் கருவூலத்துறை கட்டிடத்திலுள்ள முதல் தளத்தில் இயங்கி வருகிறது. இவ்வலுவலகத்தின் கீழ் கூட்டுறவுச் சங்கங்களின் துணைப்பதிவாளர் இராமநாதபுரம் மற்றும் பரமக்குடி ஆகிய சரகங்கள் இயங்கி வருகிறது. கூட்டுறவுச் சங்கங்களின் துணைப்பதிவாளர் (பொது விநியோகத் திட்டம்) அலுவலகம் இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் வளாகத்திலுள்ள கருவூலத்துறை கட்டிடத்தில் முதல் தளத்தில் இணைப்பதிவாளர் கட்டுப்பாட்டில் இயங்கி வருகிறது.
வ.எண். | சங்கங்களின் வகைகள் | இராமநாதபுரம் சரகம் | பரமக்குடி சரகம் | மொத்தம் |
---|---|---|---|---|
1 | மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி | 1 | – | 1 |
2 | மாவட்ட நுகர்வோர் மொத்த கூட்டுறவு பண்டசாலை | 1 | – | 1 |
3 | மாவட்ட கூட்டுறவு ஒன்றியம் | 1 | – | 1 |
4 | தொடக்க வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கி | 1 | 3 | 4 |
5 | நகர கூட்டுறவு வங்கி | 1 | 3 | 4 |
6 | வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கம் | 2 | 2 | 4 |
7 | தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் | 47 | 84 | 131 |
8 | பணியாளர்கள் கூட்டுறவு கடன் மற்றும் சிக்கன நாணயச் சங்கம் | 23 | 11 | 34 |
9 | தொடக்க கூட்டுறவு பண்டசாலை | 0 | 1 | 1 |
10 | பணியாளர் கூட்டுறவு பண்டசாலை | 1 | 0 | 1 |
11 | மாணவர் கூட்டுறவு பண்டசாலை | 2 | 0 | 2 |
மொத்தம் | 80 | 104 | 184 |
மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மற்றும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் வழங்கும் கடன் விபரங்கள்
பயிர் கடன்
பயிர் கடனாக நெல்லுக்கு (மானாவாரி) ஏக்கர் ஒன்றுக்கு ரூ.14,900/-ம், நிலக்கடலைக்கு (மானாவாரி) ரூ.13,300/-ம், மற்றும் கரும்பு நடவு ரூ.47,000/- வழங்கப்படுகிறது.
நகை அடைமானக் கடன்
பொது நகைக்கடன் மற்றும் விவசாய நகைக்கடன் என இரண்டு வகை நகைக்கடன் வழங்கப்படுகிறது. பொது நகைக்கடன்– சங்கத்தின் “அ” மற்றும் இணை உறுப்பினர்களுக்கு அதிகபட்சம் ரூ.10,00,000/- வரை ஓர் ஆண்டு தவணையில் 11.25% சதவிகித வட்டியில் வழங்கப்படுகிறது. விவசாய நகைக்கடன்– சங்கத்தின் “அ” வகுப்பு அங்கத்தினர்களுக்கு பயிர்க்கடன் வழங்குவதைப் போன்ற நிபந்தனைகள் அடிப்படையில் நிலத்தின் அளவுக்கேற்ப கடன் வழங்கப்படுகிறது. ஒரு உறுப்பினருக்கு ரூ.3,00,000/- வரை விவசாய நகைக்கடன் வழங்கப்படுகிறது. விவசாய நகைக்கடன்களுக்கு நெற்பயிரைப் பொறுத்தவரை தவணைத் தேதி ஜீன் 30, மற்றும் கரும்பு பயிருக்கு 1 வருடம் தவணை ஆகும்.
மத்திய காலக்கடன் (தனிநபர் உத்திரவாதத்துடன்)
பெட்டிக்கடை, பால்மாடு, வெள்ளாடு வளர்ப்பு, சிறுதொழில் போன்ற தனி நபர் ஜாமின் போரில் இக்கடன் ரூ.50,000/- வரை வழங்கப்படுகிறது.
மத்திய காலக்கடன் அடைமானத்தின் பேரில்
சிறு பால்பண்ணை, கோழிப்பண்ணை, டிராக்டர் முதலானவற்றிற்கு ரூ.2,50,000/- முதல் ரூ.9,50,000/- வரை இக்கடன் வழங்கப்படுகிறது.
சிறு பாசனத்திட்டக் கடன்
ஆழ்துளை கிணறு அமைத்தல் உள்ளிட்ட சிறுபாசன திட்டங்களுக்கு ரூ.2,00,000/- வரை கடன் வழங்கப்படுகிறது.
மாற்றுத்திறனாளி கடன்
மாற்றுத்திறனாளிகளுக்கு பெட்டிக்கடை, மளிகைக்கடை போன்ற தொழில்களுக்கு ரூ.50,000 வரை தனிநபர் ஜாமின் அடிப்படையில் கடன் வழங்கப்படுகிறது. இதில் மகளிர் பயனாளிகளுக்கு வழங்கப்படும் கடன்களுக்கான வட்டி விகிதம் 4% மட்டுமே.
மகளிர் சுய உதவிக்குழு கடன்
மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்கள் குறைந்தது 12 முதல் 20 நபர்கள் கொண்ட குழுக்களுக்கு இக்கடன் வழங்கப்படுகிறது. ஒரு குழுவிற்கு ரூ.50,000 முதல் ரூ.10,00,000 வரை வழங்கப்படுகிறது.
டாப்செட்கோ கடன் (பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்)
தமிழ்நாடு பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் பொருளாதார மேம்பாட்டு கழக (டாப்செட்கோ) கடன்கள் சுய உதவிக் குழு உறுப்பினர்கள் மற்றும் தனிநபர்களுக்கு வழங்கப்படுகிறது. தனி நபருக்கு அதிகபட்சம் ரூ.2,00,000/-வரையிலும் மற்றும் குழுவிற்கு அதிகபட்சம் ரூ.10,00,000/- வரையிலும் கடன் வழங்கப்படுகிறது. தனி நபர் கடன்கள் 6% வட்டி விகிதத்திலும், குழுவுக்கு 4% வட்டி விகிதத்திலும் கடன்கள் வழங்கப்படுகிறது.
டாம்கோ (சிறுபான்மையினர்) கடன்
தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழக (டாம்கோ) கடன்கள் தனிநபருக்கு அதிகபட்சம் ரூ.50,000/- வரை வழங்கப்படுகிறது. 20 நபர்கள் கொண்ட சுய உதவிக் குழுவிற்கு அதிகபட்சம் ரூ.10,00,000/- வரை வழங்கப்படுகிறது. இக்கடன்களுக்கு 7% வட்டி நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
வீட்டுக்கடன்
வீடு கட்டுவதற்கு அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரிபவருக்கு வருமானத்தின் அடிப்படையில் அதிகபட்சம் ரூ.10,00,000 வரை வழங்கப்படுகிறது.
மகளிர் தொழில் முனைவோர் கடன்
சிறுதொழில் புரியும் மகளிர் தொழில் முனைவோர் கடன் அதிகபட்சமாக ரூ.3,00,000 வரை வழங்கப்படுகிறது.
தானிய ஈட்டுக்கடன்
தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் மற்றும் வேளாண் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனைச் சங்க உறுப்பினர்கள் தானியங்களை கிட்டங்கியில் ஈடாக வைப்பதன் மூலம் அதிகபட்சம் ரூ.5,00,000 வரை கடன் பெறலாம்.
சம்பளக் கடன் / தனி நபர் கடன்
அரசுத்துறையில் பணிபுரியும் ஊழியர்களுக்கு மட்டும் வழங்கப்படுகிறது. பணிபுரியும் நிறுவனங்களில் சம்பளச்சான்று பெறப்பட்டு அதிகபட்சம் ரூ.1,00,000 வரை இக்கடன் வழங்கப்படுகிறது.
கூட்டுறவுச் சங்கங்களின் இணைப்பதிவாளருக்காக
பொது விநியோகத் திட்டம்
தமிழ்நாடு அரசின் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் இராமநாதபுரம் மாவட்டத்தில் மொத்தம் 777 நியாய விலைக்கடைகள் செயல்பட்டு வருகின்றன. இதில் 559 முழு நேரக்கடைகளும், 218 பகுதி நேரக்கடைகளும் அடங்கும். இவற்றில் கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளர் கட்டுப்பாட்டில் உள்ள கூட்டுறவு நிறுவனங்களால் 521 முழு நேரக்கடைகளும், 217 முழு பகுதி நேரக்கடைகளும் ஆக மொத்தம் 738 நியாய விலைக்கடைகள் நடத்தப்பட்டு வருகின்றன. மாவட்டத்திலுள்ள 777 நியாய விலைக்கடைகளில் மொத்தம் 358532 குடும்ப அட்டைகள் இணைக்கப்பட்டுள்ளன.
பொது விநியோகத் திட்டத்தின் நோக்கம்
நாட்டிலுள்ள அனைத்து மக்களுக்கும் குறிப்பாக ஏழை மக்கள் அனைவருக்கும் உணவுக்கு உத்திரவாதம் வழங்குதல், அவர்களுக்கு தரமான அத்தியாவசிய பொருட்கள் குறைந்த விலையில் ஒவ்வொரு மாதமும் நியாய விலைக்கடைகள் மூலம் கிடைக்கச் செய்வது தமிழக அரசின் பொது விநியோகத் திட்டத்தின் நோக்கமாகும்.
பொது விநியோகத் திட்டம் கணினிமயமாக்கல்
தமிழ்நாடு அரசால் பொது விநியோகத் திட்டம் முழுவதையும் கணினிமயமாக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு ஏற்கெனவே நடைமுறையில் இருந்த காகித குடும்ப அட்டைகளை மாற்றி மின்னனு குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டு செயலாக்கம் செய்யப்பட்டுள்ளது. மின்னனு குடும் அட்டைகள் மூலம் குடிமைப்பொருட்கள் விநியோகம் செய்ய அனைத்து நியாய விலைக்கடைகளும் விற்பனை முனைய கருவி (Point of Sale) வழங்கப்பட்டுள்ளது. மாவட்டத்திலுள்ள அனைத்து குடும்ப அட்டை பயனாளிகளின் கைபேசி எண் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் அனைவரின் ஆதார் அட்டை விபரங்கள் மின்னனு குடும்ப அட்டையில் (Smart Card) பதிவு செய்யப்பட்ட காரணத்தினால் அரசுக்கு நிதியிழப்பு பெருமளவில் குறைக்கப்பட்டதுடன் உண்மையான பயனாளிகளுக்கு குடிமை பொருட்கள் சென்றடையும் நிலையும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. மேலும், குடும்ப அட்டைதாரர்களுக்கு விநியோகம் செய்யப்படும் பொருட்களின் அளவும் மதிப்பும் உடனுக்குடன் குறுஞ்செய்தியாக (SMS) அவர்களது கைபேசி எண்களுக்கு அனுப்பப்பட்டு வருகிறது.
பொது விநியோகத் திட்டப்பணிகள் முழுமையாக கணினிமயமாக்கப்பட்டுள்ள நிலையில் மின்னனு குடும்ப அட்டைகள் மற்றும் விற்பனை முனைய கருவிகள் அரசு பொது விநியோகத் திட்ட இணையதளத்துடன் இணைக்கப்பட்டுள்ளன. நியாய விலைக்கடைகள் தொடர்பான அத்தியாவசியப் பொருட்களின் ஆரம்ப இருப்பு, ஒதுக்கீடு மற்றும் நகர்வு குறித்த விபரங்கள் (Data) உடனுக்குடன் பொது விநியோகத் திட்ட இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படுகின்றது. இதன் மூலம் குடும்ப அட்டைதாரர்கள் அரசு இணையதளத்தில் பார்த்து தெரிந்து கொள்ளும்வகையில் வெளிப்படைத் தன்மையுடன் நியாய விலைக்கடைகளின் செயல்பாடுகள் கொண்டுவரப்பட்டுள்ளது.
நியாய விலைக்கடைகளுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்கள் மேற்படி நியாய விலைக்கடைகளில் உள்ள ஆரம்ப இருப்பு மற்றும் சென்ற மாதத்தின் விற்பனைக்கு தகுந்தபடி கணினி மூலம் ஒவ்வொரு மாதமும் ஒதுக்கீடு செய்யப்படுகிறது. இதனால் நியாய விலைக்கடைகளின் தேவைக்கு தகுந்த ஒதுக்கீடு கிடைக்கிறது. இதனால் நியாய விலைக்கடைகளில் தேவையின்றி அத்தியாவசியப் பொருட்கள் அதிகளவில் இருப்பு வைக்கப்படுவது தவிர்க்கப்படுகிறது.
நியாய விலைக்கடைகளில் அலுவலர்கள் மற்றும் பொது விநியோகத் திட்ட களப்பணியாளர்களால் மேற்கொள்ளப்படும் ஆய்வு விற்பனைமுனைய கருவி மூலம் செய்யப்படுகிறது. இதனால் நியாய விலைக்கடைகளில் கண்டறியப்படும் இருப்பு குறைவு மற்றும் முறைகேடு விபரங்களை உயர்நிலை அலுவலர்களால் எளிதாக கண்காணிக்க முடிகிறது.
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக கிட்டங்கியிலிருந்து குடிமைப் பொருட்கள் நகர்வு செய்யப்பட்டவுடன் சம்பந்தப்பட்ட நியாய விலைக்கடையின் விற்பனை முனைய கருவியில் இருப்பு பதிவாகிவிடுகின்றது. இதனால் நகர்வுப் பணியில் தவறுகள் ஏதும் நிகழா வண்ணம் தடுக்கப்படுகின்றது.
விற்பனை முனைய கருவி பயன்படுத்தப்பட்டு வருவதால் குடும்ப அட்டைதாரர்கள் தாங்கள் பெற தகுதியுள்ள அளவுகளில் அத்தியாவசியப் பொருட்களை பெற முடிகிறது.
பொது விநியோகத் திட்டப்பணிகள் கணினிமயமாக்கப்பட்டுள்ளதால் ஒரு குடும்ப அட்டைதாரர் ஒரு கடையிலிருந்து மற்றொரு கடைக்கு தங்களது குடும்ப அட்டையினை மாறுதல் செய்யும் பணி எளிதாக்கப்பட்டுள்ளது. மேலும், குடும்ப உறுப்பினர் சேர்க்கை அல்லது நீக்கம் ஆகியவற்றை பொதுச் சேவை மையங்கள் மற்றும் இணைய வழி மூலம் செய்ய வசதி ஏற்படுத்தப்பட்டு எளிதாக்கப்பட்டுள்ளது.
வகைப்பாடு | முழு நேரக்கடைகளின் எண்ணிக்கை | பகுதி நேரக்கடைகளின் எண்ணிக்கை | மொத்தம் | இணைக்கப்பட்ட குடும்ப அட்டைகள் |
---|---|---|---|---|
கூட்டுறவுத் துறை | 521 | 217 | 738 | 330119 |
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் | 19 | 0 | 19 | 21243 |
பனைவெல்ல உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சம்மேளனம் | 6 | 1 | 7 | 2733 |
மகளிர் சுய உதவிக்குழு | 13 | 0 | 13 | 4437 |
மொத்தம் | 559 | 218 | 777 | 358532 |
வகைபாடு | எண்ணிக்கை |
---|---|
அரிசி குடும்ப அட்டைகள் | 308939 |
சர்க்கரை விருப்ப அட்டைகள் | 6328 |
அந்தியோதயா அன்னயோஜனா (AAY) | 39924 |
காவலர் அட்டை | 1285 |
வனக்காவலர் அட்டை | 0 |
எப்பொருளும் வழங்கப்படாத அட்டைகள் | 189 |
தட்கல் அட்டை | 0 |
முதியோர் அட்டைகள் (OAP) | 1761 |
அன்னபூர்ணா அட்டைகள் (ANP) | 106 |
மொத்தம் | 358532 |
அத்தியாவசியப் பொருட்கள் நகர்வுப் பணிகள்
மாவட்ட ஆட்சியரின் ஒப்புதல் பெற்ற வழித்தடத்தின்படி பொது விநியோகத் திட்ட அத்தியாவசியப் பொருட்கள் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக கிடங்குகளிலிருந்து நியாய விலைக்கடைகளுக்கு நகர்வு செய்யப்படுகிறது. இராமநாதபுரம் மாவட்டத்தில் கூட்டுறவுத் துறை கட்டுப்பாட்டில் உள்ள நியாய விலைக்கடைகளுக்கு மாவட்ட முதன்மைச் சங்கமான இராமநாதபுரம் மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டசாலை (இராம்கோ பண்டசாலை) மூலம் 578 நியாய விலைக்கடைகளுக்கும் சுய நகர்வுச் சங்கமான பரமக்குடி கூட்டறவு விற்பனைச் சங்கம், கமுதி கூட்டுறவு விற்பனைச் சங்கம் மற்றும் திருவாடானை கூட்டுறவு விற்பனைச் சங்கம் ஆகியவை மூலம் அந்தந்த சங்கங்களின் கட்டுப்பாட்டில் உள்ள 160 நியாய விலைக்கடைகளுக்கும் அத்தியாவசியப் பொருட்களை நகர்வு செய்யப்பட்டு வருகிறது.
நகர்வுப் பணிகள் துணைப்பதிவாளர் (பொது விநியோகத் திட்டம்) மற்றும் கூட்டுறவு சார்பதிவாளர்கள் (பொது விநியோகத் திட்டம்) ஆகியோரால் தினசரி கண்காணிக்கப்பட்டு வருகிறது. பொது விநியோகத் திட்டப் பொருட்கள் கொண்டுசெல்லப்படும் நகர்வு வாகனங்களில் நகர்புப்பணி எழுத்தர்கள் உடன் சென்று நியாய விலைக்கடை விற்பனைகாளர்கள் முன்னிலையில் அத்தியாவசியப் பொருட்கள் இறக்கி வைக்கப்படுகிறது.
மேலும், முன்நகர்வுப் பணிகள் பிரதிமாதம் 21-ம் தேதியில் தொடங்கப்பட்டு நகர்வு மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில் மாத இறுதிக்குள் 60 சதவிகிதம் முன் நகர்வு முடிக்க ஏதுவாக பிப்ரவரி 2018 திங்கள் முதல் பிரதிமாதம் 18-ம் தேதி முன்நகர்வுப் பணிகளை துவக்க உத்திரவிடப்பட்டுள்ளது.
நியாய விலைக்கடைகள் ஆய்வு
குடும்ப அட்டைதாரர்களுக்கு பொது விநியோகத் திட்ட அத்தியாவசியப் பொருட்கள் முறையாக விநியோகம் செய்யப்படுவதை கண்காணிக்கும் பொருட்டு மாதந்தோறும் கூட்டுறவுச் சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் 25 நியாய விலைக்கடைகளிலும், துணைப்பதிவாளர் (பொவிதி) 50 நியாய விலைக்கடைகளிலும் மற்றும் ஒவ்வொரு கூட்டுறவு சார்பதிவாளர் (பொவிதி) 45 நியாய விலைக்கடைகளிலும் ஆய்வு மேற்கொள்ள குறியீடு நிர்ணயிக்கப்பட்டு அதன்படி ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
விற்பனை முனைய கருவி
இராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள 777 நியாய விலைக்கடைகளுக்கும் 777 விற்பனை முனையக் கருவிகள் வழங்கப்பட்டு 01.06.2017 முதல் பயன்பாட்டில் இருந்து வருகிறது. விற்பனை முனையக் கருவிகளில் குடும்ப அட்டைதாரர்களின் கைபேசி எண்ணும், குடும்ப உறுப்பினர்களின் ஆதார் அடையாள அட்டை எண் விபரங்களும் பதிவேற்றம் செய்யும் பணிகள் முடிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் குடும்ப அட்டைகளுக்கு அத்தியாவசியப் பொருட்கள் வழங்கப்பட்ட அளவு மற்றும் விலை தொடர்பான குறுஞ்செய்தி சம்பந்தபட்ட குடும்ப அட்டைதாரர்களின் கைபேசிக்கு உடனுக்குடன் அனுப்பப்படுகிறது.